Sathish Speaks

Discover a secret income opportunity that can help you achieve financial freedom without a regular job.

இந்த வருமானசீக்ரெட்தெரிந்து கொண்டால் நீங்கள் வேலைக்கே போக வேண்டாம்..!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/

நம்மில் எத்தனை பேர், நமக்கு பிடித்தமான, விரும்பி படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்கிறோம்? என்ற கேள்வியை கேட்டால் பலரும் இல்லை எனக் கூறுவதை தான் பார்க்க முடியும்.

தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு, பிடித்தமான வேலையை தேடி செல்லவும் தைரியம் இல்லை. ஏனெனில் அந்தளவுக்கு பலரிடம் நிதிச் சுதந்திரம் (Financial Freedom) என்பது கிடையாது. பொதுவாக, நிதிச் சுதந்திரம் என்பது நிதி ரீதியாக மட்டுமல்ல, வாழ்க்கைக்கான சுதந்திரமாகவும் உள்ளது. ஆக இதை சரியாக திட்டமிட்டு செயல்படுவது மிக அவசியமானது. நிதிச் சுதந்திரம் என்பது ஒருவர் எந்த ஒரு வேலை அல்லது தொழில் செய்யாமல் அவரின் நிதித் தேவைகளை அவரிடம் ஏற்கெனவே இருக்கும் செல்வங்களை கொண்டு நிறைவேற்றிக் கொள்வதாகும்.

குறிப்பாக நடுத்தர வருமானப் பிரிவினரின் இடையே இது குறித்த விழிப்புணர்வு என்பது மிக குறைவாக உள்ளது. நிதிச் சுதந்திரம் குறித்து நாம் கற்றுக் கொள்வதோடு, நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது நிதியை மட்டும் அல்ல, நிதி ஒழுக்கத்தையும் வளர்க்கும். இப்படிப்பட்ட நிதிச் சுதந்திரத்தை அடையும் முக்கிய ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தகுதி வளர்ச்சி..!

பொதுவாக நிதிச் சுதந்திரத்தை அடைய முக்கிய தேவை வருமானம் / சம்பாத்தியம் மட்டுமே. இந்த வருமானத்தை அடைய முக்கிய வழி, நாம் செய்யும் வேலை ஆகும். பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் தேவைக்கு போதுமான அளவு நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறோம் என்றால், அதற்கு பலரும் இல்லை என்றுதான் கூறுவர். ஏதோ ஒன்று படித்தோமா? ஓரளவுக்கு சம்பளம் கிடைத்ததா? இப்படி தான் இருப்பார்கள். பெரிதாக சம்பள வளர்ச்சி இருக்காது?

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமெனில், நம்முடைய தகுதியை படிப்படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே அடுத்த கட்டத்திற்கு நம்மை கூட்டி செல்லும். ஒரு ஊழியர் மூலம் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறதோ? அந்த அளவிற்கு, நிறுவனம் ஊழியர்களை சிறப்பான சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள பார்க்கும். ஆக ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என இருக்காமல், மேலும் வளர்ச்சியை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சம்பளம் ஆண்டு தோறும் அதிகரித்து வரும். நிதிச் சுதந்திரம் அடைவதற்கான வழி உருவாகும்.

கடன் இல்லா வாழ்க்கை:

பலரும் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இந்த  விஷயங்களில் தான். பலரும் பெரிய பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளில் சென்று படிக்க வேண்டும் என்கிற மோகத்தில், வங்கிகளில் கடன் வாங்கி படிப்பார்கள். அதன்பிறகு அந்த கடனை  திரும்ப செலுத்த பல ஆண்டுகள் மாதத் தவணைக் கட்டிக் கொண்டிருப்பார்கள். திறமையானவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தாலும் நல்ல வேலை கிடைக்கும்.

அதேபோல் தான் வீடு என்பதும். சொந்தமாக வீடு கட்டுகிறோம் அல்லது சொகுசு வீடு வாங்குகிறோம் என்ற பெயரில், அதிக தொகை வீட்டு கடன் வாங்கி அதில் முடங்கி போகிறார்கள்.  இதன் காரணமாக அடுத்த 10 – 20 வருடங்களுக்கு தொடர்ந்து மாத தவணை  செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு நிதிச் சுதந்திரம் என்பது இருக்காது. ஆக தகுதிக்கு மீறி கடன் வாங்கி பிறரை கவர வேண்டும் என்பதற்காக படிப்பது, சொகுசு வீடு கட்டுவதை/ வாங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது நிதிச் சுதந்திரத்தை விரைவில் அடைய முடியும்.

அவசர நிதித் தேவை ;

எந்த நேரத்தில் எந்த நிதிப் பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இதில் முதலாவதாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், அவசர தேவைக்கு என எப்போதும் 6 மாத குடும்பச் செலவுக்கு தேவையான  தொகையை அவசரக் கால நிதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.  உதாரணத்திற்கு கொரோனா காலகட்டத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்து பல மாதங்கள் மிக மோசமான நிதிச் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயத்தில் பலரும் கடன் வாங்கியும், தங்க நகை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை விற்பனை செய்தும் சமாளித்தனர். ஆக இது போன்ற சூழலை எதிர்கொள்ள, எப்போதும் குறைந்தபட்சம் 6 மாத செலவு தொகையாவது அவசர நிதியாக சேமிப்பில் வைத்திருக்க வேண்டும்.

காப்பீடுகள் கட்டாயம்..!

ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசி போதிய அளவுக்கு எடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில்  இது திடீர் விபத்து அல்லது திடீர் நோய் பாதிப்பு ஏற்படும் போது பெரிய மருத்துவச் செலவுகளை கடன் வாங்காமல் சுலபமாக சமாளிக்க உதவும். குடும்பத்திற்கு மொத்தமும் சேர்த்து  ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பதை போட்டு வைத்தால், யாருக்கு பெரிய மருத்துவச் செலவு எதிர்பாராத விதமாக ஏற்பட்டாலும் சமாளிக்க உதவும்.

நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்றால், கட்டாயம் டேர்ம் லைஃப்  இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். இது எதிர்பாராத விதமாக குடும்பத்தில் வருமானம் ஈட்ட கூடிய நபர் இல்லாவிட்டால்,  குடும்பத்தினருக்க்கு நிதி ரீதியாக பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

ரிஸ்க் & ரிவார்டு

பெரும்பாலானவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், அந்தப் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்திருக்க மாட்டார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாமல் குறைந்த வட்டி வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்வார்கள். அதையும் நீண்ட கால அடிப்படையில் திட்டமிட மாட்டார்கள். ஆக இது மிகப் பெரிய தொகுப்பு நிதி இலக்குகளை அடைய உதவாது. ஆக மிகப்பெரிய அளவில் தொகுப்பு நிதியை அடைய பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இவை நீண்ட கால அடிப்படையில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கொடுக்கும் ஒன்றாக அமையும். இதில் சற்று ரிஸ்க் அதிகம் என்றாலும், வருமானம் அதிகம்.  பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருமானம் கிடைக்கிறது.

பாஸிவ் இன்கம்:

பலரும் காலை 10 மணிக்கு அலுவலகம் சென்றோமா? மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோமா? மாதம் குறிப்பிட்ட சம்பளம் வாங்கினோமா? என இருப்பார்கள். எதிர்பாராத சூழலில் ஒரு மாதம் வேலை செல்ல முடியவில்லை எனில், அவர்களின் வருமானம் என்பது இருக்காது; சிக்கல் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் உருவாகும். அதுவே வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் ஒரு கூடுதல் வருமானம் அல்லது இரண்டாவது வருமானம் என்பது வந்து கொண்டிருந்தால், அதனால் பெரும் தாக்கம் இருக்காது. ஆக உங்களுக்காக உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய விட வேண்டும். பாஸிவ் இன்கம் என கூறப்படும் செயலற்ற வருமானத்தை அடைய, சரியான திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். மொத்தத்தில் இரண்டாவது வருமானம் என்பதை எப்போதும் திட்டமிட்டு இருக்க வேண்டும்.

கூடுதலாக உங்களுக்கு இருக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே கூடுதல் வருமானத்திற்கான வழியை உருவாக்கி கொடுக்கும். அந்த வருமானத்தை தொடர்ந்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருவது மூலம் பாஸிவ் வருமானத்தை பெற முடியும்.

ஓய்வு கால திட்டமிடல்:

நல்ல வேலை, சிறப்பான சம்பளம், திறமை என இருந்தாலும், பலரும் அவர்களின் ஓய்வு காலத்தில் 60 வயதில் கூட வேலைக்கு செல்வதை காண முடிகிறது. அவர்கள் ஓய்வு காலத்திற்கு சரியான திட்டமிடலை செய்யாததே இதற்கு காரணம் எனலாம். ஆக உங்கள் சம்பளத்தில் நிச்சயம் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்து வர வேண்டும். இது வயதான காலகட்டத்தில் நிதிச் சுதந்திரத்துடன் இருக்க வழிவகுக்கும்.

உதாரணத்திற்கு தற்போதைய காலகட்டத்தில் உங்கள் செலவு மாதம் 50,000 ரூபாய் எனில், 12 மாதங்களுக்கு 6 லட்சம் ரூபாய் செலவு என்பது இருக்கும். உங்கள் பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதி என்பது உங்கள் தற்போதைய ஆண்டு  செலவை விட 25 மடங்கு இருக்க வேண்டும். ஆக உங்கள்  தொகுப்பு நிதி இலக்கு என்பது 1.5 கோடி ரூபாயாக இருக்கும். 1.5 கோடி ரூபாய் இலக்கு என்பது பெரியது என்றாலும் கூட அதை நீண்ட கால அடிப்படையில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் எளிதாக சரியானதொரு தொகுப்பு நிதியை உருவாக்க முடியும். மேற்கண்ட 1.5  கோடி ரூபாய் தொகுப்பு நிதியில் மியூச்சுவல் ஃபண்ட் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் ( SWP)  மூலம் ஆண்டுக்கு 4%  எடுத்தால் கூட,  மாதம் 50,000 ரூபாய் எடுத்து செலவு செய்ய முடியும். முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால், செலவுக்கு பணம் எடுக்கப்பட்டது போக உங்கள் ஓய்வுக் கால தொகுப்பு நிதி தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். இதன் மூலம் பணி ஓய்வுக் காலத்திலும் ஒருவர் நிதிச் சுதந்திரத்துடன் இருக்க முடியும்.

கால சுதந்திரம்:

ஒருவர் ஒரு விஷயத்தை செய்யும் போது அவர்களுக்கான கால அவகாசம் என்பது அதிக அளவில் இருக்கும், அதை சிறப்பாக செய்வார்கள். உதாரணத்திற்கு 5 வருடத்தில் உங்கள் ஓய்வு காலத்திற்கு போதிய தொகுப்பு நிதையை சேர்ப்பது என்பது கடினமாக இருக்கும். 25, 30 ஆண்டுகள் போன்ற நீண்ட கால அடிப்படையில் போதிய அவகாசம் இருந்து, அதன் மூலம் இலக்கை அடைவது மிக எளிதாக இருக்கும். ஆக கால சுதந்திரம் (Time Freedom) என்பது எந்த அளவுக்கு அதிகம் இருக்கிறதோ? அந்தளவுக்கு மிக எளிதாக நிதிச் சுதந்திரத்தை எட்ட முடியும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் இளம் வயதில் இருந்தே முதலீடு செய்ய ஆரம்பிப்பது என்பது உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கியம் எனலாம்.

1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money
Scroll to Top
×