எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/
சம்பளம் வாங்கிய முதல் நாள் ராஜா போல செலவு செய்யும் நம்மால், மாத கடைசியில் அப்படி இருக்க முடிவதில்லை. சொல்லப்போனால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலையே பலர் மத்தியில் காணப்படுகிறது. மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தொகையை, எதற்கு எப்படி செலவு செய்தோம், எவ்வளவு சேமித்தோம், முதலீடு செய்தோம் என்றால் பலரின் பதில் ‘தெரியவில்லை’ என்பதாகத் தான் இருக்கும். ஒரு சிலர் கை நிறைய சம்பாதித்தாலும், சேமிப்புக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுப்பதில்லை.
வரவு எட்டணா? செலவு பத்தணா?
இன்றைய நிலையில் பலரின் நிலை வரவு எட்டணா? செலவு பத்தணா? என்பதாக இருக்கிறது.
40 வயதான என் நண்பர் ஒருவர் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதாவது வருடத்திற்கு 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கையில் சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. மாத கடைசியில் அவரின் நிலைப்பாடு பூஜ்ஜியமாக தான் இருக்கிறது. அப்படி என்ன செலவு என பார்க்கையில், சென்னை இசிஆர் -ல் வாங்கிய சொகுசு வீட்டுக்கு மாத தவணை மட்டும் 1 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். வருடத்திற்கு அதற்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் சொகுசு காருக்கு மாத தவணையாக ரூ. 60,000 அதாவது வருடத்திற்கு 7.2 லட்சம் ரூபாய் செலுத்துகிறார்.
குடும்பத்துடன் சர்வதேச சுற்றுலா செல்ல வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். இது போக அவரின் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் செலவழிக்கிறார். குழந்தைகளின் கல்வி செலவாக வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலுத்தி வருகிறார். அவரின் வருமான வரியாக சுமார் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறார். ஆக மொத்தத்தில் 48 லட்சம் ரூபாய் வருமானத்திற்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது. அவரின் நிதி நிலைப்பாட்டை எப்படி சரி செய்வது? சேமிப்பை எப்படி மேம்படுத்துவது என பார்ப்போம்.
படி-1: செலவை குறைத்து முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.!
ஆடம்பரமான அபார்ட்மெண்ட், சொகுசு கார் என சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் வாழ்க்கை தரத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள முடியாது. உடனடியாக செலவுகளையும் குறைக்க முடியாது. ஆனால் மாதம் 25,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். அந்த வகையில் வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதை அவரால் சமாளிக்க முடியும். அது பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆக அவர் குடும்பத்தோடு செல்லும் சர்வதேச சுற்றுலாவுக்கு செலவிடும் ரூ.4 லட்சம் தொகையில் குறைத்து எஸ்.ஐ.பி-ல் முதலீடு செய்ய முடியும். அதை ஆண்டுதோறும் 10% அதிகரிக்கலாம். அப்படி செய்யும்பட்சத்தில் மேற்கண்ட எஸ்.ஐ.பி முதலீட்டை 15 ஆண்டுகள் தொடருகிறார் என வைத்துக் கொள்வோம்.
சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் கூட, அவரின் தொகுப்பு நிதி 2.67 கோடி ரூபாயாக இருக்கும். பல ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20%-க்கு மேல் கூட வருமானம் கொடுத்து வருகிறது என்பதால் 15% வருமானம் என்பது சாத்தியமே எனலாம். ஆனால், அதற்கு பங்குச் சந்தையின் இறக்கம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சீராக இடை விடாமல் முதலீடு செய்து வருவது அவசியமாகும்.
படி -2: வீட்டு செலவு இவ்வளவா?
மேற்கூறிய நண்பரின் வீட்டு செலவு மட்டும் மாதம் 75,000 ரூபாய், அதுவும் வீட்டு வாடகை என்பது இல்லாமல் எனும் போது, இது மிக அதிகம். இதை குறைக்க வீட்டு செலவுக்கு என தனியாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் போட்டு வைக்கலாம். அத்தோடு குடும்பத்தினர் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளில் அவசர தேவைக்கு என ஒன்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்றவைகளை நிரந்தரமாக முடித்துக் கொள்ளலாம். இது கூடுதலான அனாவசிய செலவுகளை தவிர்க்க உதவும். பயன்படுத்தும் ஒரே கார்டுக்கு வருடாந்திர கட்டணம் இல்லாமல், சலுகைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வீட்டு கணக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து மாதம் 75,000 ரூபாய் செலவில், சுலபமாக வாரம், 3,500 ரூபாய் மிச்சப்படுத்தலாம். இது மாதம் 14,000 ரூபாய் ஆகும்.
நம்மவர்களை பொறுத்த வரையில் உளவியல் ரீதியாக பார்க்கும் போது கையில் இருக்கும் காசுக்கு ஏற்ப செலவை செய்வோம். ஆக 75,000 ரூபாய் வீட்டு செலவு என்பதை, 61,000 ரூபாயாக சுருக்கிக் கொள்வதில் பிரச்னை இருக்காது. அதற்கேற்ப செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளலாம். மிச்சப்படுத்தும் 14,000 ரூபாயையும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் 15 வருடங்கள் போடுவதாக வைத்துக் கொள்வோம். இதற்கும் சராசரியாக 15% வருமானம் என கணக்கிட்டால் 15 ஆண்டுகள் கழித்து தொகுப்பு நிதியாக 93 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
குரோர்பதி!!!
படி 1 ல் ரூ.2.67 கோடி ரூபாய் தொகுப்பு நிதியும், அதனுடன் படி இரண்டில் 93 லட்சம் ரூபாய் என இரண்டையும் சேர்த்தால், மொத்த முதிர்வு தொகை 3.6 கோடி ரூபாயாகும். 40 வயதில் பூஜ்ஜிய சேமிப்புடன் இருக்கும் நண்பர், அவரின் 55 வயதில் 3.6 கோடிக்கு அதிபதியாக முடியும். இதில் 60 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கீடு செய்தால் கூட, மீதம் 3 கோடி ரூபாய் இருக்கும்.
இன்றைய காலத்தில் நண்பரின் மாத செலவினம் 75,000 ரூபாய் என வைத்துக் கொண்டால், அவரின் 55 வயதில் 6% பணவீக்கத்தை கணக்கிட்டால், அவரின் செலவு 1.75 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்த 1.75 லட்சம் ரூபாய் என்பதை எளிதாக அவரிடம் இருக்கும் ரூ.3 கோடியை வைத்து பெற முடியும். உதாரணத்திற்கு சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் மூலம் (Inflation Adjusted SWP), ரூ.3 கோடி முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.75 லட்சம் ரூபாய் பெற முடியும். 55 வயதில் ரூ.1.75 லட்சமாக இருக்கும் செலவு, 65 வயதில் பணவீக்கம் காரணமாக ரூ.2.95 லட்சமாக மாறலாம். இதையும் எஸ்.டபள்யூ.பி தொகையை ஆண்டுக்கு 10% உயர்த்துவதன் மூலம் சாத்தியமாக்கி கொள்ளலாம். 75 வயதில் எஸ்.டபள்யூ.பி மூலம் ரூ.5.29 லட்சம் என்பதையும் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும். ஒரு வேளை 85 வயது வரையில் இருக்கும்பட்சத்தில் முதலீடுகள் மூலம் மாதம் ரூ.9.48 லட்சம் வரையில் பெறலாம்.
ஆக 40 வயது வரையில் கூட சேமிக்காமல் இருந்தாலும், அதன் பிறகு சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால் கூட மிகப்பெரிய இலக்குகளை எளிதில் அடைய முடியும். குறிப்பாக உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் தேவைக்கும் (Want), அவசிய தேவைக்குமான (Need) வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாலே பிரச்னையை எளிதாக கையாள முடியும். செலவுகளை குறைத்து, முதலீட்டை அதிகரிக்க முடியும்.
குறைந்த முதலீட்டிலும் கோடி..!
இங்கே நாம் அதிக சம்பளம் வாங்கும் நண்பர் எப்படி செலவை குறைத்து கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை பார்த்தோம். இதேபோல் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தேவையில்லாத செலவுகளை குறைத்து. ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது மூலம் கோடீஸ்வரர் ஆக பணி ஓய்வு பெற முடியும்.
உதாரணத்துக்கு 40 வயதில் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம் வாங்கும் ஒருவர் மாதம் ரூ.15,000 எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டை அடுத்து வரும் ஆண்டுகளில் சம்பள உயர்வுக்கு ஏற்ப 3 சதவிகிதம் அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் 48.37 லட்ச ரூபாய் முதலீடு என்பது ரூ. 2.39 கோடியாக அதிகரித்திருக்கும்.
இதுவே மாதம் ரூ. 10,000 முதலீட்டை ஆரம்பித்து ஆண்டுக்கு 3% அதிகரித்து வந்தால் 20 ஆண்டுகளில் ரூ. 1.56 கோடி சேர்க்க முடியும். எனவே, 40,45 வயதாகி விட்டதே பணம் எதுவும் சேமிக்கவில்லையை என கவலைப்படுவதை விட்டு விட்டு களத்தில் இறங்குங்கள்..!