எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் முதலீடு செய்தாலும், ப்ளூ சிப் பங்குகள் (Blue Chip Stocks) அல்லது பென்னி பங்குகள் (Penny stocks) இவ்விரண்டில் எது சிறந்தது? எதில் முதலீடு செய்யலாம் என கேட்டால், பெரும்பாலும் ப்ளூ சிப் பங்குகளையே தேர்வு செய்வார்கள். ஏனெனில் ப்ளூ சிப் பங்குகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலுவான நம்பகத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாக நம்புகின்றனர். ப்ளூ சிப் பங்குகளை காட்டிலும் குறைந்த விலையில் இருந்தாலும் பென்னி பங்குகள், ரிஸ்க் ஆனவையாக பார்க்கப்படுகின்றன.
குறைந்த விலையில் இருந்தாலும் எல்லா பென்னி பங்குகளும் ரிஸ்க்கானவை அல்ல. அதேபோல நல்ல விலையில் உச்சத்தில் இருந்தாலும் ப்ளூ சிப் பங்குகள் அனைத்தும் சிறப்பானவை என்று கூறி விட முடியாது. அப்படி எனில் இவ்விரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி எழும். இதை தெரிந்து கொள்ளும் முன்பு பென்னி பங்குகள் என்றால் என்ன? ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன? என தெரிந்து கொள்ளலாம்.
பென்னி பங்குகள்:
பென்னி பங்குகள் என்பது மிக குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகளாகும். இவற்றின் விலை பெரும்பாலும் ஓரிரு இலக்கத்தில் (உதாரணம் ரூ.8, ரூ.40) இருக்கும். பொதுவாக இதுபோன்ற பங்குகளின் விலை 50 ரூபாய்க்கு கீழே இருக்கும். அதன் விலையில் சில நேரங்களில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதில் இரண்டு வகையான பங்குகள் உள்ளன.
1.ரைசிங் ஸ்டாக்ஸ் (Rising Stocks)
2. ஃபால் & ஜியாண்ட்ஸ் (Fall & Giants)
ரைசிங் ஸ்டாக்ஸ்: இந்த வகையான பங்குகள் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வருமானம் ஏதும் கொடுக்காது; பெரிய அளவில் ஏற்றம் காணாது. எனினும் இதன் வணிக அடிப்படை என்பது வலுவாக இருக்கும். எதிர்காலத்தில் வளர்ச்சி காணக் கூடியதாக இருக்கலாம். ஆக இதன் பங்கு விலை என்பது நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் கொடுக்கும் பங்குகளாக இருக்கும். உதாரணத்திற்கு டாடா குழுமத்தின் டைட்டன் பங்கை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பங்கின் விலை கடந்த 2005-ம் ஆண்டில் வெறும் 25 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது 3,400 ரூபாய்க்கு மேல் வர்த்தமாகி வருகிறது. இது பல முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை அள்ளி கொடுத்திருக்கிறது எனலாம். ஆக ரைசிங் பென்னி பங்குகள் லாபம் கொடுக்கலாம் என்றாலும், நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
ஃபால் & ஜியாண்ட்ஸ்: இந்த வகையான நிறுவனங்கள் மிகப் பெரிய பிரபலமான நிறுவனங்களாக இருந்திருக்கலாம். இவற்றின் பங்கு விலையும் உச்சத்தில் இருந்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது பிரச்சனையால் மிக மோசமான சரிவை சந்தித்து இருக்கலாம்.
உதாரணத்திற்கு சுஸ்லான், வோடபோன், யெஸ் பேங்க் என பல பங்குகள் எடுத்துக் கொள்ளலாம். யெஸ் பேங்க், பங்கு 2018-ம் ஆண்டில் 375 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது. இவ்வங்கி அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்திருந்தது. ஆனால் சரியான நேரத்தில் கடனை வசூலிக்க முடியாமல், நிதி ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சரியான நிர்வாகம் இல்லை என்று, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன் பிறகு சரியத் தொடங்கிய இந்த வங்கியின் பங்கு விலை தற்போது 20 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. பலரும் இதுபோன்ற பங்குகளில் செய்யும் முதலீட்டுத் தவறு இப்பங்கானது மீண்டும் பழைய உச்சத்தை எட்டும் என வாங்கி போடுவது தான். ஆனால் இது மிக தவறான அணுகு முறையாகும். பொதுவாக, இந்த பென்னி பங்குகளை பற்றிய தகவல்கள் பொது வெளியில் மிக குறைவாகவே கிடைக்கும். இதன் காரணமாக இந்தப் பங்குகள் விலை மீண்டும் பழைய உச்சத்தை தொடுமா? இல்லையா என்பதை எளிதில் கணிக்க முடியும். ஆனால், பென்னி பங்குகளில் இது மிக கடினம் ஆகும்.
ப்ளூ சிப் பங்குகள் என்றால் என்ன?
பொதுவாக ப்ளூ சிப் பங்குகள் என்பது நீண்ட காலமாக முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து நல்ல லாபத்தை கொடுத்து வரலாம். பங்குச் சந்தையின் பெரும் சரிவு கால கட்டத்தில் அதிகமாக வீழ்ச்சி காணாது. ஒரு வேளை கணிசமான அளவு சரிவைக் கண்டாலும் கூட, குறுகிய காலத்தில் மீண்டும் ஏற்றம் காணலாம். மிக குறைந்த விலையில் பங்கு இருந்தாலும் கூட, அது சார்ந்திருக்கும் நிறுவனம் நல்ல வணிகத்தை கொண்டிருக்கும். அதனால், நீண்ட காலத்தில் தொடர்ந்து வருமானம் கொடுக்கும் பங்குகளாக இருக்கும். உதாரணத்திற்கு ஐ.டி.சி நிறுவனப் பங்கின் விலை ஆரம்பக் காலக் கட்டத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால் சமீபத்தில் இரு மடங்கு லாபத்தை பதிவு செய்துள்ளது. தற்போது ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்கானது பெரியளவில் மாற்றமின்றி கடந்த 36 மாதங்களாக காணப்படுகிறது. எனினும் இந்தப் பங்கு எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்கும் பங்காக இருக்கலாம்.
ப்ளூ சிப் நிறுவனங்கள் யாருடன் எல்லாம் வணிகம் செய்கிறார்கள். என்ன வணிகம்? அதன் மதிப்பு என்ன? வருமானம், நிகர லாபம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் விரிவாகவும் எளிதாகவும் கிடைக்கும். இதன் காரணமாக இந்தப் பங்குகள் விலை மீண்டும் பழைய உச்சத்தை தொடுமா? இல்லையா என்பதை எளிதில் கணிக்க முடியும்.
ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப..!
ஒருவர் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க கூடிய முதலீட்டாளர் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப ப்ளு சிப் பங்குகளா? பென்னி பங்குகளா என திட்டமிட வேண்டும். முதலில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் குறிப்பிட்ட தொகையை ரிஸ்க் ஓரளவுக்கு குறைவான பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறிப்பாக லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட்,ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யுங்கள். அதன் பிறகு ரிஸ்க் அதிகமான மிட் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்து அனுபவம் பெறுங்கள். அதன் பிறகு லார்ஜ் கேப் பங்கு, அதன் பிறகு மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யுங்கள்ல் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் ஃபண்ட்கள் மிக அதிக ரிஸ்கானவை என்பதால் அவை தவிர்க்க வேண்டியவையாகும்.
இப்படி நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யும் முன் போதுமான அளவுக்கு அவசரக் கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இருப்பது கட்டாயமாகும். தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருக்கும் நிலையில் 10% தொகையை எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க கூடிய ரைசிங் ஸ்டாக்ஸ் போன்ற வலுவான அடிப்படையை கொண்ட பென்னி பங்குகளை தேர்வு செய்து வாங்கலாம். ஆக உங்களுடைய ரிஸ்க் விகிதம் எப்படி? என முழுமையாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு பென்னி பங்குகள் ஏற்றதா? ப்ளூ சிப் பங்குகள் ஏற்றதா? என தெரிந்து கொண்டு, சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்வது அவசியமாகும்.