Sathish Speaks

7 financial mistakes to avoid for better wealth growth.

கண்டிப்பாக இந்த 7 தவறுகளை செய்யாதீர்கள்:   உங்கள் செல்வத்தின்மதிப்பு அதிகரிக்க சூப்பர்  டிப்ஸ்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/

ஒரு சரியான நிதி திட்டமிடலை உருவாக்குவது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு  அந்த நாம் செய்யும் சில தவறுகளையும் மாற்றிக் கொள்வதாகும்.  அது மிகப் பெரிய நிதி இலக்குகளை (Finance Goals) கூட எளிதில் அடைய உதவிகரமாக இருக்கும்.

தவறுகளை திருந்தி கொள்வது உங்கள் செல்வத்தின் (Wealth) மதிப்பை அதிகரிக்க மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும். பெரும்பாலான மக்கள் இன்றைய காலகட்டத்தில் தங்கள் நிதியை சரியாக நிர்வகிப்பதில்லை. சொல்லப்போனால் அவர்களை அறியாமலேயே சில தவறுகள் செய்கின்றனர். இது அவர்களையும் அறியாமல் அவர்களின்  செல்வத்தின்  மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அந்தத் தவறுகளை சரி செய்து கொண்டாலே, பணத்தை சரியாக  நிர்வகிக்க முடியும்.  பொதுவாக, பலரும் செய்யும்  ஏழு  முக்கிய தவறுகள் பற்றி பார்ப்போம்.

1 சமூக அஸ்தஸ்துக்காக அதிக செலவு..!

இன்றைய கால கட்டத்தில் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று, சமூகத்தில் தங்கள் அஸ்தஸ்து உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகும்.

 தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, கார் வரையில் மிக விலை உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்; மற்றவர்கள் மதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களின் நிதி தகுதிக்கு மீறி அதிக செலவு செய்கிறார்கள்.

இதை தவிர்த்து தங்கள் தேவை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப  வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். யாரோ  நண்பர், உறவினர்கள் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அதிக விலை கொடுத்து நாமும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது பலரும் செய்யும் மிக முக்கியமான தவறுகளில் ஒன்று.

2 வெளி உணவுகளை தவிர்த்தல்..!

இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வரும் ஒரு மோசமான பழக்க வழக்கங்களில் ஒன்று,பெரும்பாலும் வெளி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகும்.சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வரும் வித விதமான உணவகங்களே  இதற்கு சாட்சி. கடையில் சாப்பிடுவது என்பது மக்களின்  அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி விட்டது எனலாம்.

இன்றைய நடுத்தர குடும்பங்கள் தொடங்கி,பணக்கார குடும்பங்களில் வரையில் தவிர்க்க வேண்டிய இந்த வழக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இது குடும்ப செலவில் பணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்கும். உடல் நலத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெளியில் ஓட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவதை குறைந்துக் கொண்டாலே நம்மால் மிகப் பெரிய தொகையை மிச்சப்படுத்தி, முதலீடு செய்து செல்வம் சேர்க்க முடியும்.

3 பிராண்ட்டு பொருள்களுக்காக அதிகமாக செலவிடுதல்..!

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆடைகள், ஷீக்கள், பெல்ட்கள், நாம் முடிவெட்டும் சலூன்கள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை பிராண்டு ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

போதிய பண வசதி இல்லை என்றாலும் ஐபோன், ஆப்பிள் லேப்டாப் என பெரிய பிராண்டடு பொருள்களை தகுதிக்கு மீறிய அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே வந்திருக்கிறது. இப்படி செய்வதால் முதலீட்டுக்கான தொகை குறைந்து செல்வம் சேர்வது, நிதி இலக்குகள் நிறைவேறுவது தடைபடுகிறது.

4 சுற்றுலாவுக்காக அதிக செலவு..!

சமீப காலமாக மக்களிடையே பரவி வரும் மற்றொரு விஷயம், சுற்றுலா செல்வதற்காக சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில், தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

குழந்தையின்  உயர் கல்வி, மருத்துவ செலவு,  கார், சொந்த வீடு  போன்றவற்றுக்காக தனித் தனியாக எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்து வருபவர்கள், தற்போதைய காலக் கட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காக குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி  முறையில் தங்கள் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருகின்றனர்.

குறிப்பாக 25 – 35 வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர், கண்டிப்பாக  சர்வதே சுற்றுலா அல்லது வேறு எங்கேனும் செல்ல வேண்டும் என அதிக செலவு செய்கின்றனர். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, சுற்றுலாவுக்காக அதிக அளவு செலவு செய்வது என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று. சுற்றுலாவுக்காக ஆண்டு தோறும் அதிக தொகையை செலவு செய்து வந்தால், முதலீட்டுக்கு பணம் மிச்சமாகாது. சம்பளத்தில் சுமார் 3-5 சதவிகித தொகையைதான் சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும்.  

5 பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு தான் தரமான கல்வி கிடைக்கிறது. அங்கு படித்தால்தான்  குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள்.

 பொதுவாக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒருவர் படிக்க ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாயாவது கட்டணம் என்பது இருக்கும். ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் 3 லட்சம் ரூபாய் செலவாகும். இது நடுத்தர குடும்பத்திற்கு மிகப் பெரிய செலவு ஆகும். வருடத்திற்கு 45 – 50 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்  எனில், இதில் 3 லட்சம் ரூபாயை பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுவது என்பது பெரிய பிரச்னையாக இருக்காது. இதுவே 10-12 லட்சம் ரூபாய் மட்டுமே வருடத்திற்கு சம்பாதிக்கும்  நடுத்தர குடும்பத்திற்கு, இது மிகப் பெரிய செலவு ஆகும்.

குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வியை கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் ஏராளம் உண்டு.  அவற்றை தேர்வு செய்து, அங்கு  குழந்தைகளை படிக்க வைக்கலாம். ஒரு வேளை ஒரு சில வருடங்கள் கழித்து உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அப்போது பெரிய பள்ளிக் கூடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால் வருமானம் குறைவாக இருக்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே சி.பி.எஸ்.இ பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். குழந்தைகளின் கல்வி செலவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

6 திருமணத்திற்கு அதிக செலவிடுதல்

ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்று. இதனால் பலரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதிலும் திருமணம் என்றாலே பிரைடல் மேக்கப் என்கிற மணமகள் அலங்காரம் என்பது மிகப் பெரிய டிரெண்டாகி வருகிறது. இதற்கு மட்டும் சில லட்சங்கள் செலவு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதேபோல், வீடியோ, புகைப்படம் என லட்சக்கணக்கில் செய்யும் குடும்பங்கள் மிக அதிகம்.  

 சிறுக சிறுக சேமித்து வைத்த பெரும்பாலான சேமிப்புகளை இப்படிபட்ட ஆடம்பர செலவுகளிலேயே பலரும் பணத்தை கரைத்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் அதையும் தாண்டி கடன் வாங்கிச் செலவு செய்கின்றனர்.

கடன் வாங்கி திருமணச் செலவுகளை மேற்கொள்வதை தவிர்க்கலாம். மாறாக இதுபோன்ற அனாவசிய செலவுகளை தவிர்த்து, அதை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம். 

7  கிரெடிட் கார்டு பயன்பாடு

இன்றும் பலர் அடுத்த மாத சம்பளத்தில் தான் தற்போதைய மாத செலவுகளை செய்து கொண்டிருப்பர். சிலருக்கு மாத கடைசியில் கை கொடுப்பது கிரெடிட் கார்டுகள் தான்.

இன்னும் சிலர்  ஓட்டல், கிளப், சினிமா, சுற்றுலா என ஜாலியாக கிரெடிட் கார்டு மூலம் இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள்.  அடுத்த மாதம் சம்பளத்தில் அதை கட்டிக் கொள்ளலாம் என கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  

இது மிக மோசமான ஒரு பழக்கம். நமது தாத்தா, பாட்டி அல்லது அம்மாவிடம் ஏதேனும் அவசர தேவைக்காக பணம் கேட்டால், தாங்கள் சேமித்து வைத்த தொகையை பல இடங்களில் இருந்து எடுத்து வந்து தருவர்.  ஆனால், இன்றைய சூழல் அப்படி இல்லை. மாறாக கடன் வாங்கியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலவு செய்கிறோம். ஆக இதுபோன்ற மோசமான பழக்கங்களை தவிர்த்தாலே நம்மிடம் பெரிய தொகை என்பது மிச்சமாகும். அதனை முதலீடு செய்யும் போது செல்வம் சேரும்.  

பார்ட்டிகள் பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் உள்ளிட்ட சில தினங்களுக்கு அதிக செலவு செய்வதாகும்.  குழந்தையின்முதல் பிறந்த நாள். 10-வது திருமண நாள் என நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் பெரிய ஓட்டல் அல்லது பொழுதுபோக்கு விடுதிகளுக்கு கூட்டிச் சென்று லட்சக்கணக்கான ரூபாயை கண் மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். இது மிக மோசமான தவறுகளில் ஒன்று.

குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக  1 வயதில் 1 லட்சம் ரூபாய் செலவு செய்வதற்கு பதில், அதே தொகையில் நகையாக, தங்க நாணயமாக வாங்கி வைக்கலாம்; நல்ல நிறுவனப் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.   இதன் மதிப்பு என்பது எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்.

மேலே கூறப்பட்ட தவறுகளை தவிர்த்தாலே முதலீடு செய்ய அதிக தொகை கிடைக்கும். அது செல்வத்தை உருவாக்கவும் பெருக்கவும் செய்யும். 

#1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money
Scroll to Top
×