Sathish Speaks

Passive income plan – Earn ₹1.6 lakh/month with ₹100 daily investment.

தினசரி ரூ.100 முதலீட்டின் மூலம் மாதம் ரூ.1.6 லட்சம்: பலே பாஸிவ் வருமானத் திட்டம்!

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/

இந்தியாவில் முதலீட்டின் மீதான ஆர்வம் என்பது கொரோனாவின் பாதிப்புக்கு பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது எனலாம். அதிலும் பாஸிவ் இன்கம் (Passive Income) என கூறப்படும் இரண்டாவது  செயலற்ற வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் பலரும் தாங்கள் வாங்கும் சம்பளமே  மாதம் 20,000 – 30,000 ரூபாய் தான். ஆக இதில் எப்படி பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும்? மிகப் பெரிய தொகுப்பு நிதியை (Corpus) உருவாக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள்

ஆனால்,  ஒருவர் குறைவான சம்பளம் வாங்கினாலும், சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டு முதலீடு செய்தால், நல்லதொரு வருமானம் பார்க்க முடியும்.

தினம் ரூ.100 முதலீடு…!

ஒருவர் தினசரி 100 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம்  மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பென்ஷன் போன்ற ஒரு தொகையை பெற முடியும். ஆனால் அதை  சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் முன்பு பாஸிவ் இன்கம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் உழைப்பு தொடர்ந்து  இல்லாமல், உங்களுக்கு கிடைக்க கூடிய கூடுதல் வருமானம் பாஸிவ் இன்கம் என கூறப்படுகிறது. அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, உங்களுக்காக பணிபுரிய வைப்பதாகும்.

  உதாரணத்திற்கு உங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் வீட்டின் மூலம் கிடைக்கும் வாடகை, முதலீடு மூலம் கிடைக்கும் வட்டி / வருமானம் பாஸிவ் இன்கம் எனப்படுகிறது.  எனினும்  வாடகை வருமானம் என்பது பலருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் முதலீட்டின் மூலம் இரண்டாவது வருமானத்தை அனைவராலும் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஓய்வு காலத்தில் பென்ஷன் போல் மாத வருமானம் கிடைக்கும் வகையில் கூட வழிவகை செய்து கொள்ள முடியும்.

வயதான காலகட்டத்தில் எந்த உழைப்பும் இல்லாமல் பென்ஷன் கிடைப்பதை போல மாத மாதம் வருமானம் கிடைத்தால், நிச்சயம் ஒருவரால் சந்தோஷமாக நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க முடியும்.

மாதா மாதம் பெரிய தொகை பென்ஷன் போல் கிடைக்க வேண்டுமெனில், அதற்கு சிறந்த முதலீட்டு வழிமுறை எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) ஆகும்.

இந்த முறையில் சிறிய தொகையை தொடர்ந்து நீண்ட காலத்துக்கு  முதலீடு செய்து வருவதன் மூலம் மிகப் பெரிய  தொகுப்பு தொகையை உருவாக்க முடியும். 

தினசரி 100 ரூபாய் வீதம்  அதாவது 30 நாள்களுக்கு மாதம் 3,000 ரூபாய் என்பது எல்லோராலும் முதலீடு செய்யக்கூடிய தொகைதான். பொதுவாக, எஸ்ஐபி முதலீட்டு முறை என்பதை சாதாரணமாக மற்ற முதலீடுகளை போல் தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் எஸ்ஐபி முறை மூலம் நினைத்து பார்க்க முடியாத  பெரிய தொகுப்பு நிதி சேர்க்க முடியும்.

ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு கல்வி செலவு என தொடர்ந்து பல செலவுகளை செய்து வரும் தந்தை, மூன்றாவது குழந்தையும் இருக்கிறது என்று நினைத்து  தொடர்ந்து எஸ்,ஐ,பி முதலீட்டை  அவரது பணி ஓய்வுக் காலத்துக்கு என செய்து வர வேண்டும். உங்கள்  பிள்ளைகள் வளர்ந்து நல்ல வேலைக்கு செல்லும் வரையில், தந்தையின் உதவி என்பது இருக்கும். அதே சமயம் மூன்றாவது எஸ்.ஐ.பி குழந்தையும் உங்கள் குழந்தைகளை போல வளர்ந்து வரும். இது ஒரு காலகட்டத்தில் தனித்து நின்று ஓய்வுக் காலத்தை கழிக்க பயனுள்ள ஒன்றாக இருக்கும். அதன் மூலம் அதிக தொகுப்பு நிதியை சேர்க்கலாம். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமானது. குறைந்த தொகையானாலும் இளமை காலத்தில் இருந்து முதலீடு செய்வது அவசியமானது.

இன்றும் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவெனில், முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். முதலீட்டு ஆலோசகர்களை கூட அணுகுவர். தேவையான விவரங்களை தெரிந்து கொள்வர். ஆனால் முதலீட்டை தொடங்க மாட்டார்கள். மாறாக காலம் மட்டுமே கடந்து கொண்டு இருக்கும். ஆனால் காலத்தோடு உங்களுக்கான சுமையும் அதிகரித்து கொண்டே செல்வதை புரிந்து, உடனடியாக முதலீட்டைத் தொடங்குவது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதில் முதலீடு செய்யலாம்?

இந்தியாவின் பொருளாதாரம் என்பது சர்வதேச நாடுகளை காட்டிலும் வலுவான பாதையில் சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையிலும் வலுவான போக்கே காணப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் 40% வருமானத்தையும், 2022ல் 40% வருமானத்தையும். 2023ல் 40% வருமானத்தையும் தொடர்ந்து கொடுத்துள்ள பல நிறுவனப் பங்குகள் உள்ளன. பல பங்குச் சந்தை சார்ந்த ஃஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 20-25 சதவிகித வருமானத்தை காண முடிகிறது. இந்த வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை என்றாலும் ஆண்டுக்கு சராசரியாக 12%க்கு மேல் வருமானத்தை சாதாரணமாக எதிர்பார்க்கலாம். 

கடந்த 2002 – 2007 வரையிலான காலகட்டம் என்பது மிக சிறப்பான வருடமாக இருந்து வந்தது. அதேபோன்று தற்போதைய 2024-2029  சூழலும் மாற வாய்ப்பிருக்கிறது. ஆக நீங்கள் மாதம் மாதம் முதலீடு செய்ய நினைக்கும் 3,000 ரூபாயை சிறப்பான நல்ல வருமானம் கிடைக்க கூடிய,  பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.  நீங்கள் செய்யும் 3000 ரூபாய் என்பதோடு நிறுத்தாமல், சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்திற்கு வருடம்  முதலீட்டுத் தொகையை 10% அதிகரிக்க வேண்டும். இது மேற்கொண்டு தொகுப்பு நிதியை கணிமாக அதிகரிக்க  பயனளிக்கும். இங்கே மாதம் ரூ.30,000 சம்பளம் வாங்கும் ஒருவர், அதில் 10% தொகையை அதாவது ரூ.3,000-ஐ அவரின் பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதிக்காக முதலீடு செய்வதாக வைத்துகொள்வோம்.

தொகுப்பு நிதி எவ்வளவு கிடைக்கும்?

இந்தியாவின் முதன்மையான பங்குச் சந்தையான பாம்பே பங்குச் சந்தையான பி.எஸ்.இ-ன் சென்செக்ஸ் குறியீடு கடந்த1979-ம் ஆண்டில் தொடங்கியது. சென்செக்ஸ் கடந்த 44 வருடங்களில் கொடுத்த வருமானம் என பார்க்கும்போது 15.5% கிடைத்துள்ளது. இந்த விகிதம் இல்லாவிட்டாலும் கூட 12% வருமானத்தை கணக்கிட்டால் கூட, உங்கள் முதலீட்டின் முதிர்வு தொகை என்பது  2.4 கோடி ரூபாயாக இருக்கும். அது எப்படி என பார்ப்போம். 

மாத ஆரம்ப முதலீடு: ரூ.3,000

ஆண்டுக்கு முதலீட்டுத் தொகை அதிகரிப்பு: 10%

முதலீட்டு காலம்:  30 ஆண்டுகள்

வருமானம் எதிர்பார்ப்பு:  ஆண்டுக்கு 12%

மொத்த முதலீட்டு தொகை: ரூ.59.22 லட்சம்

30 ஆண்டு இறுதியில் தொகுப்பு நிதி: ரூ.2.4 கோடி

மாத வருமானம் எப்படி?

மேற்கண்ட 2.4 கோடி ரூபாய் கார்ப்ஸ்-க்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால் கூட வருடத்திற்கு, ரூ.19.2 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை மாத மாதம் பிரிக்கும்போது 1.6 லட்சம் ரூபாய் என்பதை எளிதாக பெற முடியும்.  தினம் ஆக சரியான திட்டமிடலுடன், தொடர்ச்சியாக முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் எளிதாக கடக்க முடியும். இன்றைய காலக்கட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வங்கிகளில் வைப்பு நிதிகளுக்கு சிறப்பு சலுகைகள், கூடுதல் வட்டி கிடைக்கிறது. ஆக அதை  தொகுப்பு நிதியை முதலீடு செய்து நல்ல வருமானம் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஓய்வு காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? இன்றே உங்கள் சம்பளத்தில் குறைந்தபட்சம் 10% தொகையாவது முதலீடு செய்ய திட்டமிடுங்கள்..!

#1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money
Scroll to Top
×