எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/
கிரெடிட் கார்டு பலருக்கும் வரப்பிரசாதமாக இருந்தாலும், அதனால் பயன் அடைந்தவர்களை காட்டிலும், சரியாக பயன்படுத்த தெரியாமல் பல சிக்கல்களை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஆரம்ப காலத்தில் கிரெடிட் கார்டு மிக கவர்ச்சிகரமான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், பின்னர் அதை தலையை சுற்றி வீசிய இடம் தெரியாமல் செல்பவர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு அதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படி எனில் கிரெடிட் வாங்கவே கூடாதா? அப்படி எல்லாம் இல்லை. அதை சரியான முறையில் பயன்படுத்துவதில்தான் சூட்சுமம் இருக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அவசர நிதி..!
கிரெடிட் கார்டுகளை பொறுத்த வரையில் அவசர நிதி போல வைத்திருப்பது மிக அவசியம். ஏதேனும் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் அவசர தேவைக்காக கையில் காசு இல்லாத சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் அந்தத் தொகையை சுமார் 45-50 நாள்களில் மொத்தமாக திரும்பக் கட்டும் தகுதி இருக்கும்பட்சத்தில் மட்டும்தான். ஆனால் முதல் முறையாக பயன்படுத்துபவர்கள் பலரும் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல், இஷ்டத்திற்கு பயன்படுத்தி விட்டு பின்னர் கஷ்டப்படுகிறார்கள்.
அவசர தேவையை தாண்டி தேவையில்லாத செலவுகள்…!
குறிப்பாக இளைஞர்கள் பலரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த பின்னர், ஓரிரு மாதங்கள் சம்பளம் வாங்கிய பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து கிரெடிட் கார்டுகளை கொடுக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் வைத்திருக்கும் இளைஞர்கள் அவசர தேவையை தாண்டி தேவையில்லாத விஷயங்களுக்கும் கார்டை பயன்படுத்த தொடங்குகிறார்கள்.
பியர் பிரஷர்..!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை பியர் பிரஷர் (Peer Pressure) ஆகும். உறவினர்கள், நண்பர்கள் அல்லது நம்முடன் பணிபுரிபவர்களை கவரவும், அவர்களிடம் தங்களை மதிப்பு மிக்கவராக காட்டிக் கொள்ளவும் நினைப்பதுதான். அதற்காக அவர்களை போலவே இருக்க விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு அவர்களை போலவே விலை உயர்ந்த பிராண்ட் ஆடைகள், ஸ்மார்ட்போன், போன்றவற்றை வாங்க நினைக்கின்றனர். அதற்காக கையில் பணம் இல்லாவிட்டாலும் கூட, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் உடனடியாக வாங்குகின்றனர்.
திட்டமிடாமல் செலவு செய்தல்..! (spontaneous purchase)
ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு அதை போல, உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்லுதல்ன அத்தியாவசியம் அல்லாத தேவைகளுக்கு, எதைப்பற்றியும் யோசிக்காமல் மற்றவர்களை போல நாமும் இருக்க வேண்டும் என நினைத்து கண்டபடி செலவு செய்கிறார்கள். அதற்காக செலவு செய்ய காசில்லாமல் போனாலும் கூட, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குகின்றனர்.
இதுவும் கிரெடிட் கார்டில் பலரும் செய்யும் தவறுகளில், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
குறைந்தபட்ச தொகையை செலுத்துதல்:
கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, பயன்படுத்திய தொகையில் குறைந்தபட்ச தொகையை (Minimum Due) செலுத்துவது ஆகும். பலரும் அது தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு 50,000 ரூபாய் செலவு செய்திருப்பார்கள். கையில் 15,000 ரூபாய் தான் இருக்கிறது என செலுத்த வேண்டிய நேரத்தில் வெறும் 15,000 ரூபாயை மட்டுமே செலுத்துவர். இது மிக தவறான ஒரு விஷயம். இது அதிக வட்டி விகிதங்களுக்கு வழிவகுக்கலாம். பொதுவாக, கிரெடிட் கார்டுகளுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ண்டுக்கு 35 – 45% வட்டி வசூலிக்கின்றன; இதனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய தொகையை செலுத்த வழிவகுக்கலாம். ஆக கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், அதன் பில்லை ஒரே சமயத்தில் மொத்த நிலுவையை செலுத்த திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் ஒரு கார்டில் இருந்து, இன்னொரு கார்டுக்கு தொகை அனுப்பி அதன் மூலம் நிலுவையை செலுத்துகிறார்கள். இப்படி பணம் அனுப்பும் போது, அதற்கு தனியே சில நூறு ரூபாய்கள் கட்டணம் இருக்கிறது; மேலும். வட்டியில்லாத சலுகை காலம் எல்லாம் கிடையாது. எப்போது பணம் மாற்றப்பட்டதோ அப்போதிலிருந்தே 35-45% வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள். மேலும், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தாலும் அதற்கு கட்டணம் இருக்கிறது. இதிலும் வட்டி இல்லாத சலுகை காலம் கிடையாது. எனவே, பணமாக மாற்றுவது, பணம் எடுப்பதை தவிர்ப்பது தவிர்ப்பது நல்லது. பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது மிக பொறுப்புடன் இருப்பது மிக அவசியம். இது உங்கள் நிதி செயல்பாட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். வங்கிகளை பொறுத்த வரையில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகன கடன்-ஐ காட்டிலும் கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. ஆக அதை கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.
மேற்கண்ட முக்கிய தவறுகளை தவிர்த்தாலே கிரெடிட் கார்டை மிக பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி செய்யும் பட்சத்தில் அவற்றை அவசர தேவைக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சரியான முறையில் பயன்படுத்தும் போது ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும். இதன் மூலம் ஒரு சில வருடங்களில் கணிசமான ஊக்கத் தொகையையும் பெற முடியும்.
தொடர்ந்து கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தும் போது, கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் பயனுள்ள வகையில் பல சலுகைகளை கொடுக்கின்றன. ஆக அவற்றையும் சரியான முறையில் பயன்படுத்தி பலன் அடைய முடியும்.
மொத்தத்தில் கிரெடிட் கார்டு ஒரு வரப்பிரசாதமே. அதை சரியான முறையில் பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. அதோடு ஒருவர் ஒரு கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.