எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். அது ஏழையாக இருந்தாலும் சரி,கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி. எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறோம். எனினும்பணக்காரர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. ஆனால் அவர்கள் அதை முன்கூட்டியே திட்டமிட்டுஅதை அடைய வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகின்றனர். அவர்கள் விரும்பியதை அடைய சுதந்திரமாக செயல்படுகின்றனர். அந்த மனநிலையை வளர்த்துக் கொள்வதால் தான், அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்.
ஆக நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும், கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், ஆறு குறிப்பிடத்தக்க தகுதிகளை உங்களுக்குள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மன நிலை சிறப்பானதாக இருந்தால், அதுவே உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும்.
அப்படி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1 வெற்றிதான் முதல் இலக்கு
நாம் எதை எடுத்துக்கொண்டாலும் வெற்றி என்பது இரு முறை நிகழும். முதல் வெற்றி மனதளவில் நடக்கும், இரண்டாவது வெற்றி நடைமுறையில் நடக்கும்.
பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு தொழிலை செய்வதில்லை. மாறாக அதில் சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயல்படுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டும், விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ வேண்டும் என நினைத்தால்,இந்தியாவின் சிறந்த தொழிலதிபர் ஆன முகேஷ் அம்பானி ஆயுள் முழுக்க அவர் சம்பாதித்த சொத்துகளைசெலவு செய்தால் கூட, அவரால் அவரின் சொத்துகளை செலவழிக்க முடியாது. ஆனாலும் கூட இன்று வரையில்புதிய புதிய வணிகங்களை தொடங்குகிறார். முதலீடு செய்கிறார் எனில், ஏன்? ஏனெனில் அவர்வெற்றி என்ற இலக்கை அடைய துடிக்கிறார். அந்த மனநிலையில் தான் இருக்கிறார். அதுவே அவரின் பணம் மேலும் வளர உதவிகரமாக இருக்கிறது. ஆக இந்த வெற்றி மனநிலையை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பணத்தின் பின்னால் ஓடாமல், வெற்றியை நோக்கி பயணிக்கும் போது அதுவே நம் இலக்கை அடைய உதவிகரமாக இருக்கும்.
2 பிறரை கவர பந்தா வேண்டாம்
இரண்டாவது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் நிகர சொத்து மதிப்பு என்கிற நெட்வொர்த் ஆகும். ஒரு பணக்காரருக்கும் (Rich Man), செல்வந்தருக்கும் (Wealthy man) இடையில் உள்ள விஷயங்களை கவனித்து பாருங்கள், ஒரு பணக்காரர் மிக ஆடம்பரமாக கையில் தங்க கடிகாரம், தங்க ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு பென்ஸ் கார் என வைத்திருப்பார். ஆனால் அதை சரியாக பராமரிப்பதற்கு செலவிட வேண்டிய தொகை என்பது, எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் பென்ஸ் காரின் இன்ஷூரன்ஸ், மற்ற பராமரிப்பு செலவுகள் என்பது மிக அதிகம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மொத்த சொத்தின் மதிப்பை கணக்கிட்டால், செல்வந்தரை காட்டிலும் குறைவாகவே இருக்கும்.
ஆனாலும் சமுதாயத்தில் தங்களை முன்னிலைப் படுத்தி கொள்ள இத்தனையும் செய்வார்கள். இன்னும் இதை தெளிவாக நடைமுறை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பந்தா பேர்வழிகளாக இருப்பர். ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீழ்ச்சியை சந்திக்கிறார்கள் என்றால் அவ்வளவு தான். அதோடுஅவர்களின் சொத்து மதிப்பு தரைமட்டத்திற்கு சென்றுவிடும். அதிலிருந்து அவர்களால் மீள முடியாது.
இதே ஒரு செல்வந்தரை பார்த்தால் மிக எளிமையாக இருப்பார். அவரும் பென்ஸ் கார் வைத்திருப்பார். ஆனாலும் அவர் அதை பராமரிப்பது எளிது. அவரின் வணிக தேவைக்காக அதை வாங்கியிருப்பார்.அவரின் சொத்து மதிப்பும் பணக்காரர்களை காட்டிலும் அதிகம் இருக்கும். அவர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தங்கள் நெட்வொர்த்தை எப்படி அதிகப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துவார்கள். ஆக இதெல்லாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.
3. பணம் இருப்பதை வெளியில் காட்டாதீர்கள்..!
பணம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள். பொதுவாக, நடுத்தர மக்கள் பலரும் தங்களை எப்போதும் பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக்கொள்ள நினைப்பார்கள். அதற்காக பணக்காரர்கள் பயன்படுத்துவதை போல் விலை உயர்ந்த கார், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி குவிப்பர். தங்களிடமும் பணம் இருக்கிறது என்பதை இதன் மூலம் காட்டிக் கொள்வர்.
பணக்காரர்கள் போல ஆடம்பரமாக வாழ நினைப்பார்கள். அதற்காக கடன் வாங்கி விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பது இன்னொரு துரதிர்ஷ்டவசமான விஷயம். இது மிகப்பெரிய தவறு ஆகும். அதை ஒருபோதும் நீங்கள் செய்யாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளாதீர்கள். ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளீர்களா? வங்கியில் பணம் வைத்திருக்கிறீர்களா? மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறீர்களா? விலை உயர்ந்த கார் வாங்கியிருக்கிறீர்களா? அதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் மற்றவர்கள் இடத்தில் பகிராதீர்கள். அதை விடுத்து பணக்காரர்களுக்கு இணையாக காட்டிக் கொள்ள எதையும் செய்யாதீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ பழங்குங்கள்.
அதை விடுத்து கடனை வாங்கி செலவு செய்து அஸ்தஸ்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், அது உங்களை மேலும் சரிவுக்கே கொண்டு செல்லும். இது உங்களை எப்போதும் வளர விடாது. ஆக இந்த மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
4 நீண்ட கால அடிப்படையில் யோசித்தல்..!
பலரும் நினைப்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளை வாங்கிக் கொண்டு, அது ஒரே வருடத்தில் பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க வேண்டும்எ ன்று நினைக்கிறார்கள். 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்துவிட்டு, 10% வருமானம் கிடைத்து, 11 லட்சம் ரூபாயாக எதிர்பார்த்தால் தவறில்லை. ஆனால் 10 லட்சம் ரூபாய் 10 கோடி ரூபாயாக அதிகரிக்கும்? என்று எதிர்பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு. 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 15% வருமானம் கிடைக்கிறது எனில், 50 வருடத்தில் உங்கள் முதலீடு 100 கோடி ரூபாய் என்ற இலக்கை அடைந்திருக்கும்.
ஆனால் இப்படி யாரேனும் நீண்டகால அடிப்படையில் யோசிக்கிறோமா? என்றால் நிச்சயம் இல்லை. ஆக நீண்ட கால அடிப்படையில் உங்கள் இலக்குகளை உயர்ந்ததாக வைத்திருங்கள். அது உங்கள் பணம் வளர உதவிகரமாக இருக்கும். 40 வயதான ஒருவர் இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 50 வருடம் காத்திருந்தால், 90 வயதில் 100 கோடி ரூபாய் கிடைத்து என்ன பலன் என்ற கேள்வியும் எழலாம்.
ஆக இந்த வயதில் உங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசியுங்கள். 50 ஆண்டுகள் என்பதை விடுத்து, 10, 15 ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள். ஆக நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் என்பது மிக மிக அவசியமான ஒன்று.
5 ரிஸ்கை கணக்கிடுதல்
பலரும் பங்குச் சந்தை என்றால் அது சூதாட்டம். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் முதலீடு ஆகும். அவற்றை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என பலரும் விலகியே இருக்கிறார்கள். என்னால் எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என கூறுவர். ஆனால் இது மிக தவறானது.
மாறாக வணிகமோ அல்லது முதலீடோ அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் ஈடுபடலாம்.. இது வெற்றி பாதைக்கு கூட்டி செல்லும்.அதை விடுத்து எந்த முயற்சியும் செய்யாமல் வணிகம் என்றாலே நஷ்டம். பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற மன நிலை இருந்தால், அதில் வெற்றி பெறுவதும் கடினம்.
இதுவே செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசம் எனலாம். ஆக பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது புத்திசாலிதனமான ஒன்றாக இருக்கும்.
6 தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்..!
செல்வந்தர் ஆக தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்; புதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். அது உங்களை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும். கற்றுக் கொள்வதோடு விட்டுவிடாமல் அதை செயலிலும் சரியாக செயல்படுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு பலரும் பலவிதமான வணிக திட்டங்களை கூறுவார்கள். இதை செய்தால் அவ்வளவு லாபம் கிடைக்கும். இது இவ்வளவு லாபம் கிடைக்கும். இது சூப்பரான பிசினஸ் என கூறுவார்கள்.இதை அவரிடத்தில் கேட்டு செய்த நண்பர்கள் கூட அதை வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஆனால் வணிகம் பற்றி பேசியவர் பேசிக் கொண்டுதான் இருப்பார். இந்த மன நிலையை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். கற்றுக் கொண்டதை செயல்படுத்த தொடங்குங்கள்.
இந்த ஆறு மனநிலைகளை ஒருவர் கொண்டிருந்தாலே, அவர் கோடீஸ்வரர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார் என்று அர்த்தம். மேலும், பணத்தை பெருக்க கற்றுக் கொண்டுள்ளார் எனலாம்.