Sathish Speaks

Financial planning for people over 40 to build wealth

பணி ஓய்வுக் காலம்: 40 வயதுக்கு பிறகு கோடிகள் சேர்ப்பது எப்படி?

எம்.சதீஷ் குமார்,  நிறுவனர், http://sathishspeaks.com/

எல்லோருக்குமே இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசை,  இளம் வயதில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நிம்மதியாக, நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழாமல் இருக்க வேண்டும்: அதற்கென ஒரு நிதியை சேமிக்க வேண்டும். அதன் மூலம் சம்பளம் போல மாதா மாதம் ஒரு தொகை கணிசமாக கிடைக்க வேண்டும். அதை வைத்து வாழ்வின் முதுமை காலத்தில்  நிதிச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என நினைப்பர். ஆனால் இதை எத்தனை பேர் சாத்தியமாக்கிக் கொள்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.  

பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு..!

பெரும்பாலும் நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்;  இன்னும் சில ஆண்டுகள் போகட்டும்; இன்னும் வருடங்கள் இருக்கின்றன என பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வதை தவற விட்டு விடுவார்கள்.

ஆனால் முதுமை காலத்தில் ஓய்வெடுக்க முடியாமல் வேலைக்கு சென்று அல்லல்படுவதை பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது.  இப்படி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் எனில்,  உடனடியாக ஓய்வுக் காலம் பற்றிய சரியான திட்டமிடுதலை  மேற்கொள்ளுங்கள். .

நம்மில் பெரும்பாலோர் சுமார் 40 வயது வாக்கில்தான் பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.

40 வயதான ஒருவர் தன்னுடைய ஓய்வுக் காலத்திற்கு தேவையான தொகையை எப்படி சேமிப்பது? 40 வயதிற்கு பிறகு கோடிக்கணக்கான ரூபாயை சேர்ப்பது  என்பது சாத்தியமானதா? இதை எப்படி  நடைமுறைப்படுத்துவது?

சரியான திட்டமிடல் அவசியம்…!

பலரின் வாழ்க்கையில் நடுத்தர காலகட்டத்தில், ஏதேனும் எதிர்பாராத காரணங்களால் சம்பாதித்த முழு தொகையும் இழந்திருக்கலாம். அது விபத்தாக இருக்கலாம். நண்பர்களுக்கு கடன் கொடுத்து திரும்ப வாங்க முடியாமல் இருந்திருக்கலாம். சீட்டு போட்டு பணத்தை திரும்ப பெற முடியாமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் முழுப் பணத்தையும் இழந்து, வங்கி கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருக்கலாம்.

இதற்கு மேல் நான் எங்கே கோடி கணக்கில் சேர்ப்பது? முதலீடு செய்வது எப்படி?  40 வயதிற்கு மேல் ஓய்வுக் காலத்துக்கு போதுமான நிதியை சேர்க்க வேண்டும் என்பவர்கள், சரியான திட்டமிடலை செய்தாலே போதும். போதிய நிதியை சேர்க்க முடியும்.

உண்மையில் யார் பணக்காரர்?

இந்தத் திட்டமிடலுக்கு முன்பு சரியான சொத்து என்பது எது? என புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு 60 வயதான மகேஷ் 3 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டுகள் வீடு வைத்துள்ளார். இதில் ஒரு வீட்டில் அவர் குடியிருக்கிறார். மற்றொரு வீட்டை மாதம் 30,000 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார். இதே சுரேஷ்  3 கோடி ரூபாயை ஃபைனான்சியல் அசெட் (ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள்) ஆக வைத்துள்ளார். இதன் மூலம் மாதம் அவருக்கு வருமானம் மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. இதனால் அவரிடத்தில் பணப்புழக்கம் என்பது அதிகம். சுரேஷ் பெரிய வீட்டில் ரூ.30,000-க்கு வாடகைக்கு இருக்கிறார். இவர்கள் இருவரில் யார் பணக்காரர் எனில் சுரேஷ் தான். ஏனெனில் அவரிடம் போதிய பணப்புழக்கம் என்பது உள்ளது. மகேஷிடம் வீடுகள் இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது மிகக் குறைவு தான்.

பொதுவாக தங்களிடம் இருக்கும் தொகையை பலரும் இழப்பதற்கு காரணம் பெரிய மருத்துவ செலவுகளாகத் தான் இருக்கும். இதனால் தான் மொத்த சேமிப்பு மற்றும் முதலீடுகளையும் இழந்திருக்கலாம்.  எந்தப் பெரிய மருத்துவ செலவு வந்தாலும்,  அதனை சமாளிக்க பலரும் யாராக இருக்கிறீர்களா? என்றால் நிச்சயம்  இல்லை என்று தான் கூற வேண்டும். ஆக முதலில்  ஒருவர் அவருக்கும்  குடும்பத்தினருக்கும் சேர்த்து மருத்துவக் காப்பீடு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு எடுக்க வேண்டும். இது எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் பெரிய மருத்துவ செலவுகளில் இருந்து அவரையும் குடும்பத்தினரையும் காப்பாற்றும்; கூடவே அவரின் சேமிப்பு, முதலீடு, சொத்துகளையும் காப்பாற்றும்; கடனில் சிக்குவதிலிருந்தும் காப்பாற்றும்.

அதேபோல ஒருவர் வாங்கும் சம்பளத்தை போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். அது  குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் இந்த உலகில் இல்லாவிட்டாலும், நிதி ரீதியாக குடும்பத்தினருக்கு பாதுகாப்பை கொடுக்கும்.  அதிக தொகைக்கு இந்த பாலிசியை எடுத்திருக்கும் போது, வருமானம் ஈட்டும் நபருக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினர் நிதி ரீதியாக எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.

முதலீட்டில் கவனச் சிதறல்கள் வேண்டாம்..!

பொதுவாக ஒருவரிடம் கையில்  அதிக பணம் இருக்கிறது; அதிகம் சம்பளம் வாங்குகிறார், அதிகம் சம்பாதிக்கிறார் என தெரிந்தால் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், ஒவ்வொருவரும் ஒரு ஐடியா கொடுப்பார்கள். . ஊட்டி, கொடைக்கானல், கோயம்புத்தூரில் வீடு வாங்கலாமா? சொந்த ஊரில் வீடு வாங்கலாமா? சொகுசு கார் வாங்கலாமா? இப்படி பல வகையிலும் கவனச்சிதறல் என்பது ஏற்படும்.

பிறர்  சொல்வது, நினைப்பது எல்லாம் சரியான முதலீடா? அதன் தேவை என்ன?, அதன் மூலமான வருமானம் எப்படி என முழுமையாக தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்யக் கூடாது. அதை சரியான முறையில் அலசி ஆராய்ந்து அதன் பிறகு முதலீடு செய்வது என்பது சரியான திட்டமிடலாக இருக்கும்.

சரியான முதலீட்டு திட்டங்கள்..!

பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பது இந்த விஷயத்தில் தான். சம்பாதித்த பணத்தை யாரோ  இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் கூறினார் என கண்னை மூடிக் கொண்டு சேமிப்பு மற்றும் காப்பீடு கலந்த எண்டோமென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்கி விடுவர்.  இதுபோன்ற பாரம்பரிய காப்பீட்டுத் திட்டங்களில் குறைவான காப்பீட்டு கவரேஜ் போக நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம் மட்டுமே கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் பணவீக்கம் என்பதே 6 – 7% ஆக இருக்கிறது. ஆக பாலிசி மூலம் வெறும் 5% வருமானம் கிடைக்கிறது எனில், அதனால் பெரிய பயன் இல்லை. குறைந்தபட்சம் உங்கள் முதலீட்டின் மூலம்  ஆண்டுக்கு 12 சதவிகிதமாவது வருமானம் கிடைக்க வேண்டும். 

ஒரு சிலர் வருமானம் குறைவாக இருக்கும் திட்டங்களில் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்கிறார்கள் எனில், மறுபுறம் பலரும் அதிக வருமானம் கிடைக்கும் என யாரோ கூறியதை கேட்டு கிரிப்டோகரன்சி, ஷேர் டிரேடிங், கமாடிட்டி டிரேடிங் போன்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். அவை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் போட்டப்  பணத்தை இழக்கிறார்கள்.

இன்னும் சிலர் ஆண்டுக்கு 30%,40%, 50% என அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு பொன்சி திட்டங்களில் பணத்தை போட்டு மொத்தப் பணத்தையும் இழக்கிறார்கள்.

மேற்கண்ட திட்டங்களை தவிர்த்து, நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாகும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12–14% வருமானம்  கிடைக்கலாம். இந்தியாவின் அடுத்த பொருளாதார வளர்ச்சி  இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு சிறப்பான  இருப்பதால், நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளாக தேர்வு செய்து முதலீடு செய்தால்  ஆண்டுக்கு 12- 14% வருமானம் என்பது சாத்தியம் தான்.

எஸ்.ஐ.பி மற்றும் ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி

பொதுவாக முதலீடு செய்யும் முன்பு சரியான முறையில் கணக்கீடு செய்து, தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 40 வயதில் ஒருவரின் சம்பளம், வருமானம் என்பது நிச்சயம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது  மாதச் சம்பளம், வருமானம் ரூ.80,000, ரூ.1 லட்சம் என்பது போல் இருக்கும். அதனால், மாதம் 30,000 ரூபாய் முதலீடு என்பதை எளிதாக பலரும் செய்ய முடியும்.  இதை  அவரின் பணி ஓய்வு வயதான 60 வரை, அதாவது  20 ஆண்டுகளுக்கு தொடரும்பட்சத்தில்,  ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும், நல்ல பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் போது, நிச்சயம் 2.99 கோடி ரூபாய் தொகுப்பு நிதியை அடைய முடியும். இந்த அளவுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய இயலவில்லை என்றால், மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000 முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ.2.5 கோடி அல்லது ரூ. 2 கோடி ஆக இருக்கும்.   

ஆரம்ப முதலீட்டுத் தொகையான ரூ.30,000-ஐ வருடத்திற்கு  10% அதிகரிக்கலாம். அப்படி  அதிகரித்தால் 60 வயதில்  கார்பஸ் என்பது 5.97 கோடி ரூபாயாக இருக்கும்.  இதுவே ஆரம்ப முதலீட்டுத் தொகை மாதம் ரூ.25,000 அல்லது ரூ.20,000  ஆக இருந்து, ஆண்டுக்கு 10% அதிகரித்து முதலீடு செய்யும் போது தொகுப்பு நிதி முறையே ரூ. 4.97 கோடி அல்லது ரூ.3.98 கோடி ஆக இருக்கும்.   

ஆக 40 வயதில் உங்கள் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட, சரியான திட்டமிடல் இருந்தால் கோடிகளில் பணி ஓய்வுப் பெறுவது என்பது சாத்தியமானதே. இதற்கு சரியான நிதி திட்டமிடல் மற்றும் நிதி ஒழுக்கம்  இருந்தாலே எளிதில் அடைய முடியும்.

பாக்ஸ்

தொகுப்பு நிதி நீண்டக் காலத்துக்கு வர..!

தொகுப்பு நிதி மூலம் கிடைக்கும் தொகையை அந்த அந்த ஆண்டே முழுமையாக எடுத்து செலவு செய்யாமல் குறைவாக செலவு செய்தால், தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வருவதோ, அது உயர்ந்து கொண்டே வரும்.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதிக தொகையை எடுத்து செலவு செய்ய முடியும். ஒருவரின் ஓய்வுக் கால தொகுப்பு நிதி ரூ.2 கோடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதை ஆண்டுக்கு 8 சதவிகிதம் வருமானம் தரும் திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு ரூ.16 லட்சம் கிடைக்கும். அதாவது மாதம் ரூ.1.33 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே செலவு செய்யாமல் மாதம் ரூ.70,000, ரூ.80,000 என்பது போல் செலவு செய்தால் தொகுப்பு நிதி பெருகி வரும். சுமார் ஐந்தாண்டுகள் கழித்து மாதம் ரூ.1 லட்சம், பத்தாண்டுகள் கழித்து ரூ.1.5 லட்சம் என்பது போல் எடுத்து செலவு செய்தாலும் தொகுப்பு நிதி குறையாது.  

1crorecommunity #financialeducation #investingjourney #stockmarkettips #personalfinance #wealthbuilding #financialfreedom #investmentstrategies #moneymanagement #financecommunity #successjourney #millionairemindset #financialliteracy #moneymatters #smartinvesting #1croregoals #financialplanning #stockmarketindia #investoreducation #wealthcreation #financegoals #learntoinvest #financialinsights #mutualfund #savingstips #sathishspeaks #systematicinvestment #sip #investment #stockmarket #money

Scroll to Top
×